இந்தியா

வாட்ஸ்அப்பில் தலாக் கூறியவர் மீது முத்தலாக் வழக்குப் பதிவு 

webteam

மகாராஷ்டிராவின் தானேவில் தனது மனைவிக்கு வாட்ஸ்அப்பில் தலாக் கூறியதற்காக ஒருவர் மீது புதிய முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசு இஸ்லாமிய பெண்களுக்கு அவர்களின் கணவர்கள் எளிதில் தலாக் மூலம் விவாகரத்து செய்வதை தடுக்க இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்புச் (முத்தலாக்) சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பில் நிறைவேறியது. இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் தனது ஒப்புதலை அளித்தார். 

இந்நிலையில் இந்தப் புதிய சட்டத்தின் கீழ் தானேவில் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனது மனைவிக்கு ஒருவர் வாட்ஸ் அப்பில் தலாக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர் மீது ஐபிசி பிரிவு 498ஏ மற்றும் முத்தலாக் சட்டத்தின் பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2015 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அப்பெண்ணை கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சித்திரவதைப்படுத்தியதாக காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். முத்தலாக் சட்டத்தின் பிரிவு 4இன்படி 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.