இந்தியா

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

Rasus

உத்தரப் பிரதேச முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்திற்கு வெளியே நின்று செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளரான பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரஷாந்த் கனோஜியா முதலில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை போலீசார் மறுத்துள்ளனர். கனோஜியாவிடம் விசாரணை மட்டும் செய்து வருவதாக போலீசார் கூறினர்.

ஏற்கெனவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படதை சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்ததாக பாஜகவை சேர்ந்த பிரியங்கா ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில் பிரியங்கா ஷர்மாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.