பிரபல யூடியூபர் சமய் ரெய்னா “India's got Latent” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது ஏறக்குறைய அதே தலைப்பினைக் கொண்ட ‘India's got Talent’ எனும் நிகழ்ச்சியைப் போன்றதல்ல. தனிப்பட்ட திறமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிகழ்ச்சி India's got Talent என்றால் திறமைகளைத் தாண்டி நகைச்சுவை, பொழுதுபோக்கு, டார்க் ஜோக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சி India's got Latent. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு எபிசோடிலும் புதிய நடுவர் குழு இருக்கும்; சமய் ரெய்னா மட்டுமே நிலையானவராக இருப்பார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் மற்றொரு யூடியூபரான ரன்வீர் அலஹாபாடியா, அபூர்வா முகிஜா உள்ளிட்டோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். அப்போது போட்டியாளர் ஒருவரிடம் நகைச்சுவை என்ற பெயரில் மிகவும் ஆபாசமான கேள்வியொன்றை ரன்வீர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்தில் பலரும் அல்லபாடியாவின் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகளைப் பதிவுசெய்தனர்.
இந்நிகழ்ச்சியின் டார்க் ஜோக்குகளுக்குக் கிடைத்த வரவேற்பு, நிகழ்ச்சியை ஒவ்வொரு எபிசோடிலும் ஆபாசமாக மாற்றியதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் இந்நிகழ்ச்சியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து குறிப்பிட்ட எபிசோடில் சர்ச்சைக்குறிய பதிவுகள் நீக்கப்பட்டன. இருப்பினும் குறிப்பிட்ட வீடியோ தற்போது யூடியூப் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சமய் ரெய்னா, ரன்வீர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். இதனிடையே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகரான காஞ்சன் குப்தா தனது எக்ஸ் தளத்தில், “ரன்வீர் அலஹா பாடியாவின் ஆபாசமான மற்றும் வக்கிரமான கருத்துகளுடன் உள்ள ‘India Has Latent’ நிகழ்ச்சியின் எபிசோட் இந்திய அரசின் உத்தரவினை அடுத்து நீக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கோரியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது சமூக ஊடக தளங்களில் India Has Latent நிகழ்ச்சி தொடர்பாக பதிவிட்ட அத்தனை பதிவுகளையும் நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் கூறுகையில், “வீடியோவில் பயன்படுத்தப்பட்ட மொழி என்பது மிகவும் மோசமானது, அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. இந்த விவகாரத்தில் நாங்கள் மிகத்தீவிரமாக இருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு விதிகள் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.