மத்தியப் பிரேதசத்தில் பா.ஜ.க ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே அம்மாநிலத்தில் காலியாக உள்ள 25 சட்டமன்ற தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
அதற்காக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தூரில் உள்ள சன்வேர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.கவினர் மேற்கொண்ட பேரணியில் திரளானவர்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்தோடு சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பேரணிக்கு தலைமை தாங்கிய இந்தூர் மாவட்ட பா.ஜ.க தலைவரும், சன்வேர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் சோன்கார் உட்பட ஆறு பா.ஜ.க தலைவர்கள் மீது, அரசு ஊழியரால் முறைப்படி அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாமைக்காக இந்திய தண்டனைச் சட்டம் 188வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் இந்தூர் போலீசார்.
கடந்த வாரம் கொரோனா விதிகளை பொது இடங்களில் பின்பற்றாமைக்காக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மீது இந்தூர் போலீசார் வழக்கு பதிந்தும் குறிப்பிடத்தக்கது.