சென்னை உயர்நீதிமன்றம் முகநூல்
இந்தியா

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு | குணால் கம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இது சர்சையானது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.

சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் விவாதம் எழுப்பப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இழிவுப்பேச்சுக்கு குணால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் கூறாமல் மன்னிப்பு தெரிவிக்க முடியாது என்று குணால் தெரிவித்தார்.

மேலும், குணாலுக்கு சிவசேனா ஆதாரவாளர் ஒருவர் தொலைப்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்த ஆடியோவும் வைரலானது.

இந்த விவகாரத்தில் குணால் கம்ராவிற்கு சிவசேனா மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில்தான், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குணால் கம்ரா மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், குணால் கம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம், விழுப்புரம் மாவட்டம் வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நீதிபதி, குறித்து மஹாராஷ்டிரா காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை அடுத்த மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.