இந்து, சீக்கிய மதங்களை சேர்ந்த வழிபாட்டுத் தலங்களை மாநில அரசுகள் நிர்வகிப்பது அரசமைப்புக்கு விரோதமானது என கூறி, அவற்றை நிர்வகிக்கும் உரிமையை அவர்களிடமே தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இஸ்லாமிய, பார்சி மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகள் அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் பல மாநிலங்களில் இந்து, சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களை மாநில அரசுகள் நிர்வகித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் கடவுள் மறுப்பாளர்களால் நிர்வகிக்கப் படுவதாகவும் இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் நிதி ஆதாரங்கள் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறைகூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறை மட்டும் கோயில்களுக்கு சொந்தமான 5 லட்சம் ஏக்கர் நிலங்களையும், 2.5 கோடி சதுர அடி கொண்ட கோயில் கட்டடங்களையும், சுமார் 30 கோடி சதுர அடி கொண்ட கிராமப்புற நிலங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இவற்றில் இருந்து வெறும் 36 கோடி ரூபாய் மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற மதம் சார்ந்த உரிமைகளை அரசுகள் பறிப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அவற்றின் சொத்துக்களையும் நிலங்களையும் நிர்வகிக்க அரசுகள் உருவாக்கியுள்ள நிலச் சட்டங்களை தன்னிச்சையானவை, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.