இந்தியா

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடரப்பட்ட வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

webteam

மக்கள் தொகையை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சுவாமி ஜிதேந்தரானந்த் சரஸ்வதி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அந்த பொதுநல மனுவில், ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது ஆனால் அதற்கு ஏற்ற இயற்கை வளங்கள் பெருக்கம் என்பது இல்லாமல் இருக்கிறது. மேலும் ஒரு பக்கம் வேலை வாய்ப்பின்மை, வறுமை, உணவு பற்றாக்குறை மற்றும் சுகாதார குறைபாடு உள்ளிட்டவை இருந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் மக்கள் தொகை கணக்கில் அடங்காமல் அதிகரித்து வருகிறது. ஆகவே மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, இன்று உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு மற்றும் நல்ல வசிப்பிடம், தரமான கல்வி ஆகியவை எல்லாம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் என்ற வகைப்பாட்டில் வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் இத்தகைய உரிமைகள் பறிக்கப்படுவது போல் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் ஏற்கனவே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளுடன் இந்த மனுவும் சேர்க்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்திரவிட்டனர்.