இந்தியா

‘ரத்த ஆறு ஓடும்’: மதவெறி பேச்சுக்காக முத்தலிக் மீது வழக்கு

webteam

‘இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய நடைமுறைகளை நடத்தினால் ரத்த ஆறு ஓடும்’ என்று மதவெறியை வெளிப்படுத்தும் விதமாகப் பேசிய ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் மீது, மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சுவோ மோட்டோ (Suo Moto) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தில் முதல்முறையாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி இஸ்லாமியர்களுக்கு சைவ இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமியை கண்டித்து கடந்த 2 ஆம் தேதி கர்நாடகாவில் போராட்டம் நடத்தினார். பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் பங்கேற்ற இந்த போராட்டத்தின்போது பெஜாவர் மடத்துக்கு எதிராகவும், மடாதிபதிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெங்களூருவில் மவுரியா சதுக்கத்தில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் பேசிய முத்தாலிக், “இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய நடைமுறைகள் நடத்தப்பட்டால் ரத்த ஆறு ஓடும்” என்று மதவெறியைத் தூண்டும் விதமாகப் பேசினார்.

இந்நிலையில், பெங்களூரு ஹை - கிரவுண்ட் போலீஸார், பிரமோத் முத்தாலிக் மீது சுவோ மோட்டோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 153 (ஏ) (இரு பிரிவினரிடையே பிரிவினையை ஏற்படுத்துவது), 295 (ஏ) மத உணர்வைப் புண்படுத்தி பகையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.