இந்தியா

வேட்புமனு தாக்கலுக்கு தயாரான பிரகாஷ் ராஜ் - வழக்கால் தாக்கிய தேர்தல் ஆணையம்

வேட்புமனு தாக்கலுக்கு தயாரான பிரகாஷ் ராஜ் - வழக்கால் தாக்கிய தேர்தல் ஆணையம்

webteam

நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் சில மணி நேரத்திற்கு முன்னர் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது ஊடக நண்பரான கர்நாடகாவைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் மரணத்திற்குப் பிறகு பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சார களத்தில் குதித்தார். இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசியல் அறிவிப்பை பிரகாஷ் ராஜ் வெளியிட்டார். அதன்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

பெங்களூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.சி.மோகனை எதிர்த்து அவர் களம் காண தயாராகி வந்தார். மோகன் கடந்த 2014ஆம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர் ஆவார். இருப்பினும் பெங்களூரு தொகுதியில் பிரகாஷ் ராஜ் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் மீது தேர்தல் நடத்தைகளை மீறியதாக தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 12ஆம் தேதி பரப்புரையின் போது, மைக்கை பயன்படுத்தி பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.