மகாராஷ்டிராவில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்து ரூ.10 கோடி வரை சுருட்டிய நகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள டோம்பிவலி பகுதியில் குட்வின் நகைக்கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில், வாடிக்கையாளர்களிடம் சேமிப்புத்திட்டம் என்ற பெயரில் பணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, சுமார் 50 வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தி வந்துள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக, பணத்தை நகையாகவோ அல்லது காசாகவோ பெற்றுக்கொள்ளலாம் என நகைக்கடை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்கள் பணத்தை கேட்டபோது தற்போது இல்லை என நகைக்கடை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. நகையாக கேட்டும் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடையை மூடிவிட்டு அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் கடை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் குட்வின் நகைக்கடை உரிமையாளர் மீது பண மோசடி செய்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.