இந்தியா

ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

webteam

ஓடும் ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூச்சு திணறலால் அவதிப்படும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து ரயில்களிலும் உயிர்க் காக்கும் பிராண வாயு சிலிண்டர் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஓடும் ரயில்களில் என்ன மாதிரியான மருத்துவ வசதிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளும்படியும் ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, ஏஎம் கான்மில்கார் மற்றும் டிஒய் சந்திரகுட் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீண்ட தூரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் மருத்துவ உதவி தேவைப்படும் பயணிகளுக்காக ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கின் விசாரணையில், மத்திய அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர், அஜித் சின்ஹா வாதாடினார். அப்போது, ரயில்களில் முறைப்படி மருத்துவர்களை பணியமர்த்துவது சுலபமானதல்ல; மேலும் பயணிகளுக்காக மருத்துவ உபகரணங்களை ரயில்களில் பொருத்தி பராமரிப்பது சாத்தியமில்லாதது. ஏற்கனவே பைலட் திட்டத்தின் மூலம் சோதனை முயற்சியில் ரயில்களில் மருத்துவர்களையும், மருத்துவ உபகரணங்களை பயணிகளுக்காக அறிமுகம் செய்தோம், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனென்றால், மிகவும் மோசமான நிலையிலுள்ள பயணிகளுக்கு ஈசிஜி போன்ற சாதனங்கள் தேவை. ஈசிஜி போன்ற சாதனங்கள் ஓடும் ரயிலின் சத்தத்திலும் மற்றும் அதிர்வினாலும் சரியாக செயல்படாது. எனவேதான், மிக மோசமான உடல் நலம் கொண்ட பயணிகளை ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

மத்திய அரசின் வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறினர்.