கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல கர்நாடகா இசை பாடகி சுதா ரகுநாதன். இவரது மகளின் திருமண பத்திரிகை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனையடுத்து சுதா ரகுநாதனுக்கு எதிராக சகட்டுமேனிக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
காரணம், சுதா ரகுநாதனின் மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆண் ஒரு வெளிநாட்டுக்காரர். இதனை வைத்துதான் பலரும் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்கின்றனர். இந்து கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் என தங்களை தானே சொல்லிக் கொள்பவர்கள் பலரும் சுதா ரகுநானுக்கு எதிராக தங்களது குரல்களை பதிவு செய்துள்ளனர். அதில், சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதால் சுதா ரகுநாதனை இனி கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் சுதா ரகுநாதனின் மகள் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் நபரான மைக்கேல் முர்பியின் நிறத்தை வைத்தும் அவரை இழிவாக பேசியுள்ளனர். அத்துடன் சுதா ரகுநாதன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக ஒரு வதந்தியும் பரவி வருகிறது.
இதனிடையே சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த மதத்தை பின்பற்ற வேண்டும். யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரவரின் விருப்பம். இதில் அடுத்தவர் தலையிட என்ன இருக்கிறது என்று ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓஎஸ் அருண் ஆகியோர் கர்நாடக ராகத்தில் கிறிஸ்தவ பாடல்களை பாடினர். அப்போதும் இதேபோன்ற ஒரு கடுமையான எதிர்ப்பு எழும்பியது.
Courtesy: TheNewsMinute