மகாராஷ்டிரா மாநிலத்தில் டோல் கேட்டில் டெபிட் கார்டை பயன்படுத்திய சில மணி நேரங்களில் அதில் இருந்து ரூ.87 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரைச் சேர்ந்த தர்ஷன் பட்டில்(36) என்பவர் பணி முடிந்து கடந்த சனிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காளபூர் என்ற இடத்தில் உள்ள டோல் கேட்டில் தனது டெபிட் கார்டு மூலம் ரூ.230 பணம் செலுத்தினார். அப்போது நேரம் மாலை 6.27 மணி.
அவர் டோல் கேட்டில் இருந்து சென்ற 2 மணி நேரத்திற்கு பிறகு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவு 8.31 மணியளவில் பட்டிலின் டெபிட் கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கப்பட்டதாக அவரது போனுக்கு ஒரு மெஜேச் வந்தது.
இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த நான்கு நிமிடங்களில் அடுத்தடுத்து 6 மெஜேச்கள் வந்தன. மொத்தமாக ரூ87 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கப்பட்டதற்கான தகவல்கள் வந்து சேர்ந்தன. இதனை கண்டதும் அவர் அதிர்ச்சியில் மூழ்கி போனார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
இதனையடுத்து, தனது வங்கி கிளையை அணுகிய பட்டில் பின்னர் காவல்நிலையத்தில் இந்த மோசடி குறித்து எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.
இது குறித்து பட்டில் கூறுகையில், “என்னுடைய பின் எண்ணை யாருக்கும் கொடுக்கவில்லை. உண்மையச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய பின் எண்ணை நானே தான் போடுவேன். இருப்பினும், டோல் கேட்டில் இருந்தவர்களால் எனது பின் எண் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. டோல் கேட்டில் பில் போடுபவரின் அறை மேலே உள்ளது. அதேபோல், அதற்கு மேல் சிசிடிவி கேமராவும் உள்ளது.
ஓ.டி.பி. எண் கேட்டு ஒரு மெஜேசும் வரவில்லை. டெபிட் கார்டு என்னிடம் இருக்கையில் ஓ.டி.பி. இல்லாமல் எப்படி பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.