இந்தியா

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்

JustinDurai

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. ஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மகர விளக்கு பூஜையின்போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவை இன்று பிற்பகல் பம்பை கணபதி கோயிலை சென்றடைகின்றன. மாலையில் பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்குப் பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும். மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், புல்லுமேடு, பம்மை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே சபரிமலையில் இந்த ஆண்டில் தற்போது வரை 128 கோடியே 48 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பம், அரவணை பிரசாதம் மட்டும் 57 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.