வேலை நேரம் தொடர்பாக தொழிலதிபர்களின் விவாதத்தில் ஐடி நிறுவனமான கேப்ஜெமினியின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணைந்துகொண்டுள்ளார்.
வாரத்திற்கு 47.5 மணிநேர வேலை என்பதைத் தான் ஆதரிப்பதாக கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஷ்வின் யார்டி தெரிவித்துள்ளார்.
நாஸ்காம் நிகழ்ச்சியில் பேசிய அவர் வார இறுதி நாட்களில் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சில நேரங்களில் வார இறுதி நாட்களில் தான் பணியாற்றுவதை ஒப்புக்கொண்ட அவர், விடுமுறை நாட்களில் வேலையை செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்த ஊழியருக்கு சிரமம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் பங்கேற்ற SAP நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சிந்து கங்காதரன், வேலையைவிட முடிவுகள் எடுப்பது முக்கியம் எனக் கூறினார். முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் எனக் கூறி வருவது பேசுபொருளாகி வரும் நிலையில், அஷ்வின் யார்டியின் பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.