மத்திய ஆயுதக் காவல் படையில் CAPF பணியாற்றும் வீரர்கள் அதிகமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்வது ஏன்? என்ற காரணங்களை ஆய்வு செய்த பணிக்குழு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்டை கூறியுள்ளது.
உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) மாநிலங்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகளில் படி, மத்திய ஆயுதக் காவல் படையில் CAPF பணியாற்றும் வீரர்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 730 ஜவான்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 55,000 க்கும் அதிகமானோர் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்றதாக தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்ததால் CAPF பணிக்குழு பணியாளர்களின் மனநிலைக்குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை தயார் செய்தது அந்த ஆய்வுக்குழு.
இவர்களின் ஆய்வின் படி நீண்ட நேரப் பணியும், தூக்கமின்மையும் CAPF வீரர்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறது என்றும், அவர்களின் தனிப்பட்ட குடும்பசூழல், திருமணம், விவாகரத்து காரணமாகவும் அவர்கள் பணியை முடிக்கும் முன்பே விருப்ப ஓய்வு பெறவும் செய்கிறது என்றும் கூறுகிறது.
மேலும் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானோர் விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியவர்கள் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இதில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் பணியாளர்களிடையே தற்கொலை முயற்சிகள் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை சரிசெய்ய அதிகளவிலான பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உறுதி செய்வதாக MHA Ministry of Home Affairs கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 6,302 பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் 100 நாட்கள் செலவிட்டனர் என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.