மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் குப்பைக் குவியல்களின் மேல் வயதான பெண்மணி ஒருவர் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை ஆரே காலனியில் உள்ள சாலையில் உள்ள குப்பைக் கிடங்கின் அருகே மிகவும் பலவீனமான நிலையில், 60 வயதுடைய பெண்மணி ஒருவரை, போலீசார் கடந்த ஜூன் 21ஆம் தேதி கண்டுபிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் யசோதா கெய்க்வாட் எனத் தெரியவந்தது.
மேலும், விசாரணையில், தனது பேரன் தன்னை குப்பைக் கிடங்கில் விட்டுச் சென்றதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அந்தப் பெண்மணி தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, காலையில் அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டாலும், மாலை 5:30 மணிக்குள் மட்டுமே காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்க முடிந்தது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்ததால், இறுதியில் அவர் கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர்.
மேலும், உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவரது புகைப்படம் காவல் நிலையங்களில் பகிரப்பட்டுள்ளது. எனினும், அவருடைய பேரன் ஏன் இது போன்ற மனிதாபிமானமற்ற செயலைச் செய்தான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.