அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்த வழக்கை இறுதிக்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தொடர்ந்து 40 நாட்கள் விசாரித்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தத் தீர்ப்பில் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு உரிமையானது என அறிவிக்கப்படும். இதனால் அயோத்தி இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுக்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அம்மாநில அரசு அனைத்திற்கும் தயாரான நிலையில் இருக்க ஆயத்தம் ஆகியுள்ளது. இதற்கு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் பல கல்லூரிகளில் தற்காலிகமாக 8 சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பயங்கரவாத பாதுகாப்புப் படை, தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் உள்ளூர் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் அயோத்தியில் முகாமிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுக்கும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 75 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கும் நவம்பர் 30-ஆம் தேதி வரை விடுமுறை கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அமைப்புகள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அதில் எவரேனும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டால் உடனே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸார் தனிக்குழு அமைத்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் பதிவுகளையும், அவற்றிற்கு வரும் கமெண்ட்ஸ்களையும், ஃபார்வெர்ட் மெசேஜ்களையும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.
மீரட்டில் உள்ள முஸ்லீம் மதக்குருக்கள் தீர்ப்பு வெளியாகும் அன்று அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் அனைவரும் அமைதியான முறையில் இறைவனை பிரார்த்திக்க அறிவுறுத்தியுள்ளனர். தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் இதைச் செய்யுமாறு கூறியுள்ளனர். தீர்ப்பினை வெளியிடும் 5 நீதிபதிகளின் வீடுகளுக்கும் போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.