இந்திய மாணவர்களுக்கு இந்திய மாணவர்களுக்கு ரூ.921 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த கனடா web
இந்தியா

இந்திய மாணவர்களுக்கு ரூ.921 கோடி அறிவித்த கனடா.. என்ன காரணம்..? யாருக்கெல்லாம் பயன்?

கனடா-இந்தியா உறவுகளை ஆழப்படுத்தும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மூலம் மாணவர்கள் பலன் அடையவிருக்கிறார்கள்.

PT WEB

கனடா அரசு இந்திய மாணவர்களுக்கு ரூ.921 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சியாகும். 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் விசா ஒதுக்கீடு குறைக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு இந்திய மாணவர்களை உற்சாகப்படுத்தும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான பாதை எளிதாக இருந்ததால், கடந்த காலத்தில் மாணவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்தனர்.

செப்டம்பர் 2023-இல், அப்போதைய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு ஏஜெண்ட்களின் பங்களிப்பு இருப்பதாக குற்றம் சாட்டிய பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கின.

Justin Trudo

2025ஆம் ஆண்டு கனடாவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்தியர்களின் மாணவர் விசா (Student Permit) விண்ணப்பங்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டது.

2023-இல் 2,22,540 இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-இல் இந்த எண்ணிக்கை 94,590 ஆகக் குறைந்தது.

கனடா 2025 நவம்பர் 5-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் விசா ஒதுக்கீடு 3,05,900 இலிருந்து 1,55,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்கள்

இந்தச் சூழலில், இந்திய மாணவர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது கனடா அரசு. கல்வி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளும் புதுமை, ஆராய்ச்சி தலைமைத்துவம் மற்றும் இளைஞர் மேம்பாட்டில் முதலீடு செய்கின்றன. இந்திய மாணவர்கள் கனடாவின் மிகப்பெரிய சர்வதேச மாணவர் சமூகங்களில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை

கார்னியின் டெல்லி வருகையைத் தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ921 கோடி) உதவித்தொகையை கனடா அறிவித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு திங்கள் கிழமை வருகை தந்த போது இந்தத் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்திய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கனடா $100 மில்லியன் (ரூ921 கோடி) உதவித்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

The University of Toronto

மார்ச் 2ஆம் தேதி அன்று, கனடா பிரதமர் மார்க் கார்னியின் கனடா மற்றும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 13 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன. மேலும் இந்தியாவில் மூன்று ஹைபிரிட் படிப்பு இடங்கள் (Hybrid Study Locations) தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டொராண்டோ பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான இந்திய மாணவர்கள் சுமார் 200 பேர் பயனடைவர்.