பீகார் தேர்தல் முடிவுகளில் ஓவைசி கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரது கட்சி தீவிரம் காட்ட முடிவெடுத்திருப்பது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
வாக்குப் பிரிப்பு... இந்தச் சொல் தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு வெகுவாக பயன்படுத்தப்பட்ட வருகிறது. அசாதுதீன் ஓவைசி, சிராக் பாஸ்வான் இருவரின் பெயர் அடிபட்டாலும், ஓவைசிதான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்.
பீகாரில் ஓவைசி பெற்ற வளர்ச்சிதான் இதற்குக் காரணம். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 14 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM - அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி) 5 இடங்களை வென்றுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலாக ஓவைசியின் களம் கண்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி. இதோ இப்போது 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி.
இந்த முறை பகுஜன் சமாஜ், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிகளுடன் கூட்டணி அமைத்த ஓவைசி, இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் சீமஞ்சல் பிராந்தியத்தில் 14 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு கை மேல் பலன் கிடைக்க, பீகாரில் முன்னேறி கொண்டிருக்கிறார் ஓவைசி.
2015 தேர்தல் தோல்வியை அடுத்து இன்னும் வேகமாக உழைப்பை கொடுத்தது ஓவைசி கட்சி. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் சிறுபான்மை ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களான வடக்கு டினாஜ்பூர் மற்றும் மால்டாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் முஸ்லிம் ஆதிக்கம் கொண்ட சீமஞ்சல் பிராந்தியத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது. சிறுபான்மை மக்களையும் தாண்டி, பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து களத்தில் இறங்கி போராடியது.
இதனால், இவ்விரு மாநில எல்லை மாவட்டங்களிலும் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கவனிக்கத்தக்க கட்சியாக வளர்ச்சியைக் கண்டது. ஆனால், பீகாரின் மற்ற பெரிய கட்சிகள் அவர்களை ஏனோ கண்டுகொள்ளவில்லை. தேர்தலுக்கு முன்னதாக, ஓவைசி கட்சியின் பீகார் மாநிலத் தலைவர், பீகாரின் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களையும், தனித்தனியாக சந்தித்து கூட்டணிக்கு தயார் என்று கூறினார். ஆனால், எந்த பெரிய கட்சிகளும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், விடா முயற்சியாக ஓவைசி கட்சி தங்கள் உழைப்பை மட்டும் நம்பி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் சமதா கூட்டணியுடன் களம் கண்டு வெற்றியை ருசித்துள்ளது.
மேற்கு வங்கத்தில்...
பீகாரில் ஓவைசியின் கட்சி பெற்ற வெற்றி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேற்கு வங்க அரசியலிலும் கடந்த சில வருடங்களாக ஓவைசி ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முஸ்லீம் ஆதிக்க மாவட்டங்களான வடக்கு தினாஜ்பூர், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதாக ஏற்கெனவே அறிவித்தும் இருக்கிறார். வடக்கு தினாஜ்பூரில் 9 சட்டப்பேரவை இடங்களும், மால்டா 12, முர்ஷிதாபாத்தில் 22 இடங்களும் உள்ளன. அதேபோல், மேற்கு வங்கத்தின் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 46 தொகுதிகளில் இஸ்லாமியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர்.
மேலும், மற்ற 16 இடங்களில் இஸ்லாமியர்கள் 40-50 சதவீத வாக்காளர்களைக் கொண்டுள்ளனர்; 33 இடங்களில், இஸ்லாமிய மக்கள் சுமார் 30-40 சதவீதம் ஆகும்; மேலும், 50 இடங்களில் 20-30 சதவீத இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
2011-ல் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து முதல்முறையாக ஆட்சி கட்டிலில் மம்தா அமர்ந்ததுக்கு மிக முக்கிய காரணியாக இருந்தது சிறுபான்மை வாக்குகள்தான். அப்போது இருந்து மம்தாவுக்கு சிறுபான்மையினர் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த முறை ஓவைசி களத்தில் இருப்பதால் மம்தாவுக்கு அது பின்னடைவை தரும் என்று கணித்துள்ளார்கள்.
அதேவேளையில், "உருது மொழி பேசும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் ஓவைசி கட்சியை ஆதரிக்கின்றனர். ஆனால், வங்காள மொழி பேசும் முஸ்லிம் வாக்களிக்க மாட்டார்கள்" என்று தைரியமாக ஓவைசியைச் சந்திக்க தயாராகி வருகின்றனர் மம்தா கட்சியினர். எனினும், நடக்க இருப்பது என்னவென்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
பாஜகவின் `பி' டீம் ஓவைசி?!
காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள் ஓவைசியை பாஜகவின் `பி' டீம் என கூறி வருகின்றனர். அதற்கு காரணம், மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஆர்ஜேடியின் வெற்றியை சில தொகுதிகளில் ஓவைசியின் கட்சி பிரித்தது. இதனால், தேர்தல் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. இதையடுத்தே இப்படி குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்தபோது மட்டுமல்ல, மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கும்போதே இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டது.
ஆனால், இதற்கெல்லாம் ஓவைசி தனது வெற்றி உரையில் கொடுத்த பதில், "காங்கிரஸார் தங்கள் விரக்தியை மறைக்க முயலவே இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். தோல்வியை சந்தித்தால் இப்படி ஒரு குறை கூறுகிறார்கள்.
நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பீகாரில் எங்களுக்கான பயணத்தை துவங்கிவிட்டோம். சீமஞ்சல் மக்களின் வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். அதனால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது" என்பதுதான்.
ஓவைசி குறிப்பிட்டது போல, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சீமஞ்சல் பகுதியை டார்கெட் செய்து ஐந்து வருடங்களாக பணி செய்து வருகிறது அவரது கட்சி. அதற்கான பலனைத்தான் இப்போது அறுவடை செய்துள்ளது என்பதும் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.