இந்தியா

ஆதார் கட்டாயமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஆதார் கட்டாயமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Rasus

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 31 மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நபர் அரசியல் சாசன அமர்வு 4 மாதங்களில் 38 நாட்கள் விசாரணை நடத்தி, கடந்த மே மாதம் 10-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் ஷியாம் திவான், கோபால் சுப்பிரமணியன், கபில் சிபல், ப. சிதம்பரம் உள்ளிட்ட முன்னணி வழக்கறிஞர்கள் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர்.

தனிநபர் உரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு விரோதமாக ஆதார் இருப்பதாக இவர்கள் வாதிட்டனர். மத்திய அரசு, இந்திய அடையாள ஆணையம், மகராஷ்டிர மற்றும் குஜராத் அரசுகள், ரிசர்வ் வங்கி ஆகியவை ஆதாருக்கு ஆதரவாக வாதிட்டனர். வாதத்தின் போது ஆதார் எண்களை செல்போன் எண்களுடன் இணைக்க நடவடிக்கை எடுத்திராவிட்டால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இதை மறுத்த நீதிமன்றம், அரசு தங்களது உத்தரவை தவறாக புரிந்துகொண்டு செல்போன் பயன்பாட்டுக்கு ஆதாரை கட்டாயமாக்க தங்களது உத்தரவை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருந்தது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வதற்கான உரிமையை பாதுகாக்கவே ஆதார் சட்டம் இயற்றப்பட்டதாகவும் மத்திய அரசு வாதிட்டு இருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.