இந்தியா

ஊழல் குற்றச்சாட்டு : சிஏஜி முதன்மை இயக்குநர் சாரதா சுப்ரமணியம் நீக்கம்

webteam

இந்திய தலைமை ஆடிட்டர் மையத்தின் முதன்மை இயக்குநர் சாரதா சுப்ரமணியம் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்திய தலைமை ஆடிட்டர் மையத்தின் பெண் அதிகாரியாக இருந்தவர் சாரதா சுப்ரமணியம். இவர் மத்திய அரசின் சில முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதாவது, கடந்த 2000-01 ஆகிய இரண்டு ஆண்டுகள் இவர் பெங்களூரில் காஃபி வாரியத்தின் நிதி இயக்குநராக இருந்தார். அப்போது ரூ.2,900 கோடியை சட்டவிரோதமாக பங்கு சந்தைகளில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் இவர் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டு அறிக்கையை மூத்த ஆடிட்டர் ஒருவர் மத்திய பொது சேவை ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதே குற்றச்சாட்டை மத்திய நிதித்துறையும் முன்வைத்திருந்தது. மேலும், சாரதா சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சாரதா சுப்ரமணியத்தை பதவியிலிருந்து நீக்கி மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவர்மீது கடுமையாக அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.