இந்தியா

தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

webteam

தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறை வங்கிப் பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்து, அதில் 1.25 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் பல வகையான தேர்வுகளில் தேர்வாளர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தையும் ‘பொதுத்தகுதி தேர்வு’ என்ற ஒற்றைத் தேர்வில் தவிர்க்கலாம் என கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின்படி, ஒருவர் பொதுத்தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அரசாணையற்ற மத்திய அரசு மற்றும் பொத்துறை வங்கிகளின் பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பில் பங்கேற்கலாம் எனப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் செலவும், மூளைச் சுமையும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.