இந்தியா

ராஜினாமா செய்ய புதுச்சேரி அமைச்சரவை முடிவு? - அமைச்சர் கந்தசாமி வெளியிட்ட தகவல்

webteam

புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே கலைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஆளுநர் கிரண்பேடி, மத்திய அரசின் கெடுபிடியால் காங்.எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம்” என்றார்

சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பலம் 19 ஆக இருந்தது. பாகூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால் காங்.கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ்,ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் பலம் 14 ஆக குறைந்தது. பேரவையில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏ. தேவையான நிலையில் காங் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.