இந்தியா

பெல் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெல் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

webteam

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், பெல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‌தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆங்காங்கே தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் திருச்சி பெல் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளனர். பெல் நிறுவனத்தின் வளாகத்தின் முன்பு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெல் நிறுவனத்தில் உள்ள பிஎம்எஸ் தொழிற்சங்கத்தை தவிர, அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பெல் நிறுவனத்தை சேர்ந்த 12 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பெல் உள்ளிட்ட நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு பங்கு விற்கப்படுகிறது, மத்திய அரசுக்கு எவ்வளவு வருமானம் என்பன போன்ற விவரங்கள் இனிதான் தெரியவரும். இதற்கான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு குழு அமைத்து, இனிதான் அதுகுறித்து முடிவு செய்யும்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “நீலாச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட், மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட், நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், மெகான் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரல்ஸ் லிமிடெட் ஆகிய ஐந்து சிறிய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை கொள்கை ரீதியாக முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே நேற்று அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எவ்வித வரம்பும் இல்லாமல் முழுமையாக விற்று விடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பலமுறை முயற்சித்தும் நஷ்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக மத்திய அரசால் ஏர் இந்தியாவை விற்க முடியவில்லை. தற்போது மீண்டும் அந்த முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.