திருத்தம் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முத்தலாக் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கலாம் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் உடனடி முத்தலாக் என்பது ஜாமீன் மறுப்பிற்குரிய குற்றமாகவே நீடிக்கும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் முத்தலாக் குற்றத்திற்கு அபராதத்தின் அளவை குறைப்பது, பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் வழக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது ஆகிய திருத்தங்களும் இம்மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்தாண்டு மக்களவையில் நிறைவேறியது. ஆனால் அம்மசோதாவில் பல்வேறு திருத்தங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியிருந்த நிலையில், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.