இந்தியா

`ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம்’- ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை

நிவேதா ஜெகராஜா

ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ரயில்வே நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டநிலையில், இனி 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பில் 1.5% ரொக்கம் குத்தகை தொகையாக வசூலிக்கப்படும். கொள்கை மாற்றத்தால் நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனியங்கள் அமையும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல, நாடு முழுவதும் 14 ஆயிரம் பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பள்ளிகள் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இந்த திட்டத்துக்காக ரூ.27,360 கோடி ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட அரசு பள்ளிகள் இந்த திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது