பட்டைய கணக்காயர் (சி.ஏ) மாணவர்கள் விடைத்தாள்களை திருத்தும் முறைக்கு எதிராக போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திய பட்டைய கணக்காயர் அலுவலகத்திற்கு முன்பாக ஏராளமான சி.ஏ மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தேர்வின் விடைத்தாள்களை மறு திருத்தம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆண்டுதோறும் கடினமாக படித்து எழுதிய தேர்வில், திருத்தும் முறையில் உள்ள தவறுகளால் தாங்கள் தோல்வியடைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த மே மாதம் நடந்த சி.ஏ தேர்வு முடிவுகளின் பரிந்துரைக்கப்பட்ட விடைகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளை தங்களின் விடைத்தாள்களில் உள்ள விடைகளுடன் ஒப்பிட்டு சில மாணவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தாங்கள் எழுதிய விடைகள் சரியாக இருக்கும் போதிலும் அவற்றிற்கு தவறு போடப்பட்டிருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மறுமதிப்பீடு முறைக்கு விண்ணபித்தால் மதிப்பெண்களை கூட்டுவதில் இருக்கும் பிழைகள் மட்டுமே சரிபார்க்கப்படுவதாகவும், விடைகள் சரியாக இருக்கிறதா ? இல்லையா ? என திருத்தப்படுவதில்லை என்றும் போராடும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது உள்ள மறுமதிப்பீடு முறையை மாற்றி, விடைத்தாளை மறுதிருத்தம் செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் திருத்தும் பணியில் ஈடுபடும் நபர்கள் பிழை செய்திருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், விடைகள் தொடர்பாக குறிப்பேடு புத்தகம் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும், விடைத்தாள்களை திருத்துவதில் நடுநிலை தேவை என்றும், விடைத்தாள்களில் பேனா கொண்டு விடைகளை வட்டமிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று சி.ஏ மாணவர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் மட்டுமின்றி சென்னையில் உள்ள பட்டைய கணக்காளர் அலுவலகத்தின் முன்பும் மாணவர்கள் அமைதி வழிப்போராட்டம் நடத்தினர்.