டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கவில்லை. அதேவேளையில், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் மூன்றாவது தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1952-62), வெங்கட்ராமன் (1984 - 87) ஆகியோர் குடியரசு துணைத் தலைவராக இருந்திருக்கின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1957 ஆம்ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பிறந்தவர். 16 வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்த அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கத்தில் பணியாற்றினார். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியுள்ளார். 1974இல் ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், அது பாரதிய ஜனதா கட்சியாக மாறியபோது, அதில் பணியாற்றினார். 1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, கோவையில் பாஜகவின் வளர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். அதன் பலனாக 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். 2004-2007 காலக்கட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை அவர் மேற்கொண்ட யாத்திரை பேசுபொருளானது.
அதன் பின்னர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களில் அவரால் வெற்றி பெறமுடியாவிட்டாலும், இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். குறிப்பாக 2014 பொதுத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவு இன்றி 3.8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்றார். இது அவருக்கு கோவையில் உள்ள செல்வாக்கை வெளிப்படுத்தியது. மத்தியில் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கயிறு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள மாநில பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு, சீனியரான சி.பி.ராதாகிருஷ்ணனின் உழைப்புக்குப் பரிசாக, 2023 பிப்ரவரியில் அவரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்தது. ஓராண்டுக்குப் பின் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மாநிலமான மகாராஷ்டிரத்தின் ஆளுநராக மாற்றப்பட்டார்.