கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்தராமையா கணித்துள்ளார்.
கர்நாடகாவின் மைசூருவில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சித்தராமையா, மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சி நீடிப்பது கடினம் என தான் ஏற்கெனவே கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்களும், அதிகாரத்திற்காக பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.
இவர்களின் ஆதரவுடன் பாரதிய ஜனதா அரசு எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கடந்த ஒரு மாதகாலமாக கர்நாடகாவில் அரசு நிர்வாகம் முடங்கிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆகவே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டுக்கொண்டார்.