இந்தியா

முகக்கவசம் ஆர்டர் செய்து லட்சக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர் !

webteam

ஆன்லைனில் ஒரு லட்சம் N95 முகமூடிகள் ஆர்டர் கொடுத்த தொழிலதிபர் ஒருவர் இணையக் குற்றவாளிகளால் ரூ. 2 லட்சத்திற்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மே 9 ஆம் தேதி அன்று நடைபெற்று உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர் மே 21-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. போரிவ்லியில் உள்ள எம்.எச்.பி காலனி போலீசார் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் என்ற பிரிவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் "சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு விளம்பரத்தைப் பார்த்து அந்த நம்பருக்கு கால் செய்தேன். மறுபுறம் பேசிய நபர், ராய்காட்டில் ஒரு முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலை வைத்திருப்பதாக தெரிவித்தார். நான் இரண்டு லட்சம் முகக்கவசம் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் ஒரு லட்சம் முகக்கவசம் தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார். மேலும் நீங்கள் முன்பணம் கொடுத்து ஆர்டர் செய்யவில்லை என்றால் வேறு ஒரு நபருக்கு கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

முகக்கவசம் பற்றாக்குறையாக இருக்கிறது என நினைத்து 1.65 கோடிக்கு ஒரு லட்சம் முகக்கவசத்தை ஆர்டர் செய்தேன். ஆனால் பணத்தை நேரில் தான் கொடுப்பேன் என்று கூறினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த நபர் ஊரடங்கு நீடிப்பதால் நேரில் சந்திக்க முடியாது என்று கூறினார். மேலும் முகக்கவசங்களை ஒரு லாரி மூலம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். லாரியில் முகக்கவசங்களை ஏற்றுவது போல் ஒரு வீடியோவையும் எடுத்து எனக்கு ஆதாரத்திற்காக அனுப்பிவைத்தார்.

அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிறகு, நான் ரூ .2.93 லட்சத்தை முன்கூட்டியே செலுத்த ஒப்புக்கொண்டேன். மீதமுள்ள தொகையை மே 12 வரை தவணையாக செலுத்துவதாகவும் கூறினேன். கட்டணம் செலுத்திய போதிலும், முகக்கவசம் வருவதற்கான எந்த அடையாளமும் இல்லை, மற்றும் மேலும் அந்த நபர் ஆர்டரை தாமதப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னர் ஆர்டரை ரத்து செய்த கடைக்காரர் பணத்தை திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் போலீசில் புகார் அளிப்பேன் என என்னை மிரட்டினார்" என தெரிவித்துள்ளார்.