இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் - பேருந்துகளுக்கு தீ வைப்பு

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் - பேருந்துகளுக்கு தீ வைப்பு

webteam

டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எதிர்ப்பாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பேருந்துகள் எரிக்கப்பட்டன.  

டெல்லியிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. இதனையடுத்து நடந்த வன்முறையில் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. மேலும் கார்களும் இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லி காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஓக்லா அண்டர்பாஸ்-லிருந்து சரிதா விஹார் வரை வாகனப் போக்குவரத்து முடங்கியதாக டெல்லி போக்குவரத்து போலீசார் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமையை வழங்குகிறது. 

அஸ்ஸாம் உடன்படிக்கையின்படி உருவான 6வது பிரிவை எதிர்த்து இது இருப்பதாக போராட்டக்காரர்கள் நம்புவதாலும், புலம்பெயர்ந்தோர் தங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உணர்வதாலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை அசாமியர்கள் கண்டித்து வருகின்றனர்.