Odisha-Medinipur
Odisha-Medinipur Twitter and India Today
இந்தியா

ஒடிசா ரயில்கள் விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து - வழியில் வேனுடன் மோதி விபத்து!

சங்கீதா

ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்றிரவு ஏழு மணியளவில் ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு மற்றும் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு பயணிகள் ரயில்களுடன், ஒரு சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 803 பேர் காயமடைந்தனர். தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்து நடந்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரயில்கள் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியவர்களை பாலசோரிலிருந்து ஏற்றிக்கொண்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா சென்றுகொண்டிருந்தப் பேருந்து ஒன்று, மெடினிபூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது நேருக்கு நேர் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பலருக்கு லேசான காயமும், சிலருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை காவலர்கள் மீட்டு அருகில் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் வேன் மற்றும் பேருந்து ஓட்டுநர்களும் காயமடைந்துள்ளனர். பேருந்து விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.