Veerabhadraya Mathapati
Veerabhadraya Mathapati pt web
இந்தியா

இலவச பேருந்து பயணத்திற்காக ஆண் அணிந்து கொண்ட புர்கா; வைரலாகும் வீடியோ

Angeshwar G

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கர்நாடக தேர்தலில் முந்தைய பாஜக அரசின் மீதிருந்த அதிருப்தியும், தேர்தல் அறிக்கைகளில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகளே காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.

அதிலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 கொடுக்கப்படும் என்றும் அனைத்து வீடுகளுக்கும் ரு.200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்றும் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இதில் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்பது அம்மாநில பெண்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சக்தி யோஜனா என்ற பெயர் கொண்ட இலவச பேருந்து பயணத்தின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் சமீபத்தில் பெண் ஓட்டுநர் ஒருவர் இலவச பேருந்து பயணத்தினால் எங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக வீடியோவும் வெளியிட்டிருந்தார். மறுபுறம் இத்திட்டத்தை பயண்படுத்த ஆண்கள் திட்டமிடுவது போலும் அதற்கு அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது போலும் கேலி வீடியோக்கள் இணையத்தில் அதிகளவில் பரவின. இந்நிலையில் அந்த வீடியோக்களை போல் உண்மைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கர்நாடகத்தில் ஆண் நபர் ஒருவர் இலவச பேருந்து பயணத்திற்காக புர்கா அணிந்து பிடிபட்ட சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புர்கா அணிந்து கொண்டு ஆண் பயணி ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அப்பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் சந்தேகித்துள்ளனர்.

அப்போது அவரை விசாரித்தபோது அவர் ஆண் பயணிதான் என்பது நிரூபணமாகியுள்ளது. தன் பெயர் வீரபத்ரய்யா மத்தபதி என்றும் பிச்சை எடுக்கும் நோக்கத்தில் தான் பர்தா அணிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது உடைமைகளை சோதனையிட்ட போது அவரிடம் ஒரு பெண்ணின் ஆதார் அட்டை நகல் ஒன்றும் இருந்துள்ளது. இதனால், அவர் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திற்காகத்தான் புர்கா அணிந்தது வந்துள்ளதாக பயணிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இவர் பெங்களூருவில் இருந்து ஷம்ஷிக்கு அடிக்கடி பயணம் செய்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசின் திட்டங்களை தவறாக பயண்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.