இந்தியா

டெல்லியில் எரிந்துகொண்டே இருக்கும் சுடுகாடுகள்; டோக்கன் பெற்று காத்திருக்கும் உறவினர்கள்!

டெல்லியில் எரிந்துகொண்டே இருக்கும் சுடுகாடுகள்; டோக்கன் பெற்று காத்திருக்கும் உறவினர்கள்!

sharpana

டெல்லியில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் தினமும் 350-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சுடுகாடுகளில் சடலங்கள் எரிந்துகொண்டே இருக்கின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தலைநகரில் இதுவரை இல்லாத வகையில் 380 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் தான் இது. இது தவிர்த்து பலர் கொரோனாவால் உயிரிழப்பதாக மாநகராட்சி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. டெல்லி காசிப்பூரில் இருக்கக்கூடிய தகன மேடையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரிக்க அவர்களுடைய உறவினர்கள் டோக்கன் பெற்று பல மணி நேரங்களாக காத்திருக்கும் அவல நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

சுடுகாடு அருகே ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கின்றன சடலங்கள். இதுதொடர்பாக காசிப்பூர் சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ”தினமும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருந்து 300-க்கும் அதிகமான இறந்தவர்கள் இங்கே எரிக்கப்படுகிறார்கள். பலபேர் ஆக்சிஜன் இல்லாமல் வீடுகளில் இருந்து இங்கே கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். உயிரிழந்தவர்களை எரிக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கி எரிக்கிறோம். 24 மணி நேரமும் சுடுகாடு எரிந்துகொண்டே இருக்கிறது” என்றார்.