இந்தியா

'பிரச்னை செய்தால் புல்டோசர் வரும்' - உ.பி துணை முதல்வர் அதிரடி

ச. முத்துகிருஷ்ணன்

பிரச்னை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரயாக் ராஜில் வன்முறைக்கு காரணமானவர் எனக் கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டதற்காக ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதாக மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரயாக் ராஜில் நடைபெற்ற மோதலுக்கு ஜாவேத் அகமதுதான் காரணம் எனக் கூறி அவரை காவல் துறை கைது செய்திருந்த நிலையில் அவரது வீடும் இடிக்கப்பட்டது. முன்னதாக காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான மேலும் இருவரின் வீடும் ஷகாரன் பூரில் இடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாஜகவின் “கரிப் கல்யாண்” சம்மேளனத்தில் உரையாற்றிய உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் “வளர்ச்சிப் பணிகளில் தடைகளை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை. பிரச்னை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் மிகவும் கண்டிப்பானவர். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. சமூக விரோதிகளின் எந்த விதமான இடையூறு, அமைதியின்மை மற்றும் செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. ” என்று தெரிவித்தார்.