அசாம் மாநிலம் கோவல்பாரா மாவட்டத்தில் உள்ள பைக்கான் வனப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளை இடித்து அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை பாஜக தலைமையிலான மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை, 1,000 காவலர்கள், வனத் துறையினர் முன்னிலையில் 36 புல்டோசர்கள் கொண்டு அங்கிருந்து வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கு வசித்து வந்த மக்கள் புகலிடம் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது இம்மாதத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் ஐந்தாவது நடவடிக்கை ஆகும்.
இம்மாதத்தில் மட்டும், இடிப்பு நடவடிக்கையால், துப்ரி, லக்ஷிம்பூர், நல்பாரி ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் 3,300 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மனித - யானை மோதலை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புலம்பெயர்ந்தோர் மூலம் அதிகரித்த மக்கள் தொகையை சமநிலைப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டிருந்தார். வங்காள முஸ்லிம்களின் குடியிருப்புகளை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.