இந்தியா

இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : கைதாகி ஜாமீன் பெற்றவர்களுக்கு மாலையுடன் வரவேற்பு

webteam

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவலர் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தை நிறுத்த முயற்சித்தபோது இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுபோத் குமார் சிங் என்ற காவல் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் முக்கியப் பிரமுகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விரைந்து விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 3 ஆயிரத்து 400 பக்கங்கள் அடங்கிய விசாரணை குறிப்புகளையும், குற்றம்சாட்டப்பட்ட 38 பேர் மீதான 103 பக்கங்கள் கொண்ட குற்‌றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த 6 பேருக்கு வலதுசாரி அமைப்பினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.