மும்பையில் கனமழை பெய்த நிலையில் பெந்தி பஜாரில் உள்ள 5 மாடி கட்டடம் இன்று திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 36-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு மும்பையின் ஜேஜே மருத்துவமனை அருகே அமைந்திருந்த இந்த கட்டடத்தில் 12 அறைகளும், கீழ் தளத்தில் ஆறு கிடங்குகளும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேசிய பேரிடர் சமாளிப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மும்பை மாநகராட்சி விதிமுறையின் கீழ் இந்த கட்டடம் ஆபத்தான கட்டுமானங்கள் பட்டியலில் இருந்ததா? அல்லது மழை காரணமாக இடிந்து விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.