இந்தியா

மத்திய பட்ஜெட் 2017: மருத்துவத் துறையினரின் எதிர்பார்ப்புகள்

மத்திய பட்ஜெட் 2017: மருத்துவத் துறையினரின் எதிர்பார்ப்புகள்

webteam

மத்திய பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவத் துறையினர்.

மத்திய பட்ஜெட் நாள் நெருங்கி விட்ட நிலையில் பல்வேறு துறையினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதில் மருத்துவ துறையை சார்ந்த மக்களின் கோரிக்கைகளும் மருத்துவர்களின் எதிர்பார்ப்புகளும் அடங்கியிருக்கிறது. மருத்துவச் செலவுகள் கடுமையாக அதிகரித்து விட்ட இந்நாட்களில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி மிகுந்த‌ அர்த்தமுள்ளதாகி வருகிறது. மிரள வைக்கும் மருத்துவ செலவுகள் ஏழை, நடுத்தர மக்களை வெகுவாகவே பாதித்துள்ளது. மக்களின் இப்பிரச்னைகள் தீர வேண்டுமென்றால் பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவ துறையினர். மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கும் நிலையில் அவர்களுக்கு எளிதில் மருத்துவ வசதிகள் கிடைப்பது அவசியம் என்றும் இதற்காக அப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சைத் தரத்தை உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் முதன்மையாக முன்வைக்கப்பட்டுள்ளது.மருத்துவ செலவுகளை சமாளிக்க காப்பீடு சிறந்த யுக்தியாக உள்ள நிலையில் அது பரவலாக சென்று சேர நடவடிக்கைகள் தேவை என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஸ்டென்ட், ஃபேஸ்மேக்கர், அதிநவீன ஸ்கேன் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இதன் மூலமும் மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்