4ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4ஜி உரிமம் தொடர்பாக ட்ராய்க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக முக்கியமான நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. போராட்டம் காரணமாக சேவை பாதிக்கப்பட்டால், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.