கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை நேற்று மாலை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும், நிதி மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச் செயலாளர் ரவிக்குமார், நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேறும் வரை பாஜக எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியிலேயே தங்கியிருப்பார்கள் என்றார். இதனிடையே, கர்நாடக பேரவையை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 30 ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து பெங்களூரு காவல் துறை ஆணையிட்டுள்ளது.