இந்தியா

கனிம வளங்களுள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்க எதிர்ப்பு : எடியூரப்பா போராட்டம்

webteam

கனிம வளங்கள் நிறைந்த நிலத்தை தனியாருக்கு குறைந்த விலையில் விற்க கர்நாடக அரசு முற்படுவதாக குற்றஞ்சாட்டி அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா 2 நாள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

கர்நாடகாவின் பல்லாரியில் உள்ள கனிம வளம் நிறைந்த 3 ஆயிரத்து 667 ஏக்கர் நிலத்தை ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் என்ற பிரபல தனியார் இரும்பு உற்பத்தி நிறுவனத்திற்கு விற்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இத்திட்டத்தை அமைச்சக குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் 2 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எடியூரப்பாவுடன் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகளும் விடியவிடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட இடத்திலேயே அனைவரும் தூங்கினர். 

இதுதொடர்பாக பேசிய எடியூரப்பா, கனிம வளம் மிகுந்த நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு பெருந்தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.