ஹரியானா மாநிலம் குருகிராமில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை, கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா திரும்ப அழைத்துள்ளார்.
கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா சதித் திட்டம் தீட்டி எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்க பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 76 பேர் பங்கேற்றனர். 3 பேர் புறக்கணித்தனர்.
(காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்)
அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெங்க ளூருவில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏழு மாதத்திற்கு முன் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் தொங்கு சட்டப்பேரவை உருவானதால் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகர் புகார் எழுந்தது. அப்போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் பாதுகாத்துக்கொள்ள அங்குதான் தங்க வைக்கப் பட்டனர்.
இதேபோல் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினரிடம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காக பாரதிய ஜனதாவும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நில வுகிறது. இந்நிலையில் குர்கானில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா திரும்ப அழைத்துள்ளார்.