இந்தியா

முதுகில் கனமான கற்களை சுமக்க வைத்த கொடூரம்: 6 நாட்களுக்கு பின் உயிரிழந்த 10 வயது சிறுவன்!

webteam

கர்நாடகா அருகே 10 வயது சிறுவனின் முதுகில் கனமான கற்களை சுமக்க வைத்த நிலையில், 6 நாட்களுக்கு பின் அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கவேரி மாவட்டம், விப்பனாசி கிராமத்தில் வசிப்பவர் நாகைய்யா ஹிரேமத். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதிக்கு 10 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி, அந்த சிறுவன் அருகில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அந்த சிறுவனின் பெற்றோர். அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த சிறுவன் கடையில் பணம் திருடியதாக கூறி கடை ஓனரின் கஸ்டடியில் இருந்ததை பார்த்தனர். கடை உரிமையாளர்கள் சிறுவனை கொடூரமாக தாக்கியதோடு அச்சிறுவனை அங்கிருந்து விடவும் மறுத்துவிட்டதாக தெரிகிறது. சிறுவனின் முதுகில் கனமான கற்களையும் அவர்கள் சுமக்க வைத்துள்ளனர்.

பெற்றோர்கள் கடை உரிமையாளரிடம் கெஞ்சிக்கேட்டும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. தொடர்ந்து அன்று மாலைதான் சிறுவனை விடுவித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மார்ச் 19 அன்று, ஹுப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மார்ச் 22 ஆம் தேதி சிகிச்சைப்பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இறந்த சிறுவன் மருத்துவமனை படுக்கையில் இருந்து தனக்கு நடந்த துன்பகரமான சம்பவத்தை விவரிக்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக கூறி சிறுவன் அழுகிறார். அவர்கள் அவரது முதுகில் கனமான கல் எடைகளை வைத்து கொடூரமாக தாக்கியதாகவும் வீடியோவில் தெரிவிக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட கடை உரிமையாளர்கள் பிரவீன் கரிஷெட்டர், அவரது தாயார் பசவன்னேவா கரிஷெட்டர், தாய்வழி தாத்தா சிவருத்ரப்பா ஹவேரி மற்றும் மாமா குமார் ஹவேரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வீடியோவில் சிறுவன் கூறிய அறிக்கை மற்றும் அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகவும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.