இந்தியா

”ஊழல் புகாரில் சொந்த அமைச்சரே கைதா..!’ - பஞ்சாப் முதல்வரை பாராட்டிய கெஜ்ரிவால்

”ஊழல் புகாரில் சொந்த அமைச்சரே கைதா..!’ - பஞ்சாப் முதல்வரை பாராட்டிய கெஜ்ரிவால்

சங்கீதா

பஞ்சாப் மாநிலத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா ஊழல் புகாரில் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்ட முதல்முறையிலேயே இரண்டு தேசிய கட்சிக்களான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இதையடுத்து அங்கு முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம் என்றும், ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த விஜய் சிங்கலா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெண்டர்கள் மற்றும் கொள்முதலில் ஒரு சதவீத கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உறுதியான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலாவை, தனது அமைச்சரவையில் இருந்து முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்து போலீசாருக்கு வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் பதவி நீக்கம் செய்த சில மணிநேரங்களிலேயே தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், விஜய் சிங்கலா மீது வழக்குப்பதிந்து கைது செய்து அதிரடி காட்டியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது, “எனது அரசின் கீழ் ஒரு அமைச்சர் தனது துறையின் ஒவ்வொரு டெண்டர் மற்றும் கொள்முதல் செய்வதிலும் ஒரு சதவிகிதம் கமிஷன் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விவகாரத்தை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன். இது எனக்கு மட்டுமே தெரியும். இது ஊடங்களுக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ தெரியாது. சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா மீது கடும் நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளேன். ஆம் ஆத்மி அரசு ஊழலை பொறுத்துக் கொள்ளாது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2015-ம் ஆண்டு தனது உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.

ஒரு ரூபாய் ஊழலைக் கூட நான் சகித்துக் கொள்ள மட்டேன். பஞ்சாப்பை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது நமது கடமை. ஆம் ஆத்மி அமைச்சர்களில் ஒருவர் இரண்டே மாதங்களில் ஊழலில் ஈடுபட்டதாக சில கட்சிகள் இப்போது சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இதற்கு நான்தான் நடவடிக்கை எடுத்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பகவந்த் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமை கொள்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். இன்னும் ஒருசில நாட்களில் அடுத்த சுகாதார அமைச்சர் நியமிகக வாய்ப்பு உள்ளது.