இந்தியா

370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்

370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்

webteam

ஜம்மு-காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை விமர்சித்திருந்த பிரிட்டிஷ் எம்பி டேப்பியி ஆப்ரஹாம், டெல்லி விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் நிறைவேற்றியது. இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. 370 ஆவது சட்டப்பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. அதன் காரணமாக, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த 28 எம்பிக்கள் குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டு, காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 370 சட்டப்பிரிவு குறித்து விமர்சனம் செய்திருந்த பிரிட்டிஷ் எம்பி டேப்பியி ஆப்ரஹாம், டெல்லி விமான நிலையத்தில் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர், எங்கிருந்து வந்தாரே அந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டார். அதாவது, துபாய்க்கு இந்திய அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இந்தியாவிற்குள் நுழைவதற்கான உரிய விசா இல்லாததால் திருப்பி அனுப்பியதாக அரசுத் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து டேப்பியி ஆப்ரஹாம் வெளியிட்டுள்ள செய்தியில், “எல்லோரையும் போல் தான் என்னுடைய ஆவணங்களை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் கொடுத்தேன். ஆனால், என்னுடைய விசாவை ரத்து செய்துவிட்டார்கள். என்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்து சென்று 10 நிமிடத்திற்கு பின் வந்த ஒரு அதிகாரி என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். என்னிடம் ஒரு கிரிமினல் போல் நடந்து கொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.