இந்தியா

புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கம் இதுதான் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சங்கீதா

குறுகிய மனப்பான்மையுடன் கூடிய சிந்தனைகளில் இருந்து கல்வியை மீட்பதே புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உயர் கல்வி குறித்த கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர் 21 ஆம் நூற்றாண்டிற்கு தேவையான நவீன சிந்தனைகளுடன் கூடியதாக தேசிய கல்விக்கொள்கை இருக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்களை பட்டப்படிப்புக்கு தயார் செய்வதோடு மட்டும் நின்று விடாமல் இங்குள்ள மனித வளங்களை கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

மாணவர்கள் தத்தமது தாய் மொழிகளில் கற்பதற்கு வாய்ப்பளிக்கும் தேசிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதம் உள்ளிட்ட பழமையான மொழிகளுக்கும் ஊக்கம் தரும் என அவர் தெரிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் மாற்றியமைக்கும் வகையில் கல்விக் கொள்கை இருக்கும் என பிரதமர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக அக்சய பாத்ரா என்ற பெயரில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.