பிரெட்டில் 100 சதவீதம் முழுமையான கோதுமை பயன்படுத்தப்படுவதாக பிரிட்டானியா நிறுவனம் விளம்பரம் செய்தது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து நடத்திய விசாரணையில், அந்த நிறுவனத்தின் பிரெட்டில் 62 சதவீதம் மட்டுமே கோதுமை இருப்பது அம்பலமானது.
சட்டப்படி ஒரு தயாரிப்பை முழு கோதுமை பிரெட் என குறிப்பிட, அதில் குறைந்தது 75 சதவீதமாவது கோதுமை இருக்க வேண்டும். இதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டபோது, இந்த விளம்பரம் நுகர்வோரை முற்றிலும் தவறாக வழிநடத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா அடங்கிய அமர்வு, 62 சதவீத கோதுமையைக்கொண்டு பிரெட்டை தயாரித்து விட்டு, 100 சதவீதம் எனக் கூறுவது நுகர்வோர் உரிமையை மீறும் நேர்மையற்ற வணிக முறை எனத் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டானியா நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலிருந்தும் தவறான விளம்பரத்தை பிரிட்டானியா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.