பிரிக்ஸ் Reuters
இந்தியா

டெல்லியில் பிரிக்ஸ்-ன் 18 வது உச்சி மாநாடு.. 20 ஆண்டுகளாக தொடரும் பயணம்.. கவனம் பெறும் சந்திப்பு!!

பிரிக்ஸின் கடந்து வந்த பாதை குறித்தும், இந்த அமைப்பில் இருக்கும் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகள் போர்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கவனம் பெரும் இந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு குறித்தும் பார்க்கலாம்.

Premkumar S

டெல்லியின் பாரத் மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. 4 வது முறையாக இந்த மாநாட்டை இந்தியா நடத்தவுள்ள நிலையில், டெல்லியில் பலத்த பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. இதற்கிடையில், மேற்கத்திய ஆதிக்கம் கொண்ட சர்வதேச அமைப்புகளுக்கு மாற்றாக கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது தனது 20 ஆண்டுகளை எட்டியிருக்கிறது. இந்தநிலையில், இந்த அமைப்பின் கடந்து வந்த பாதை குறித்தும், இந்த அமைப்பில் இருக்கும் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகள் போர்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கவனம் பெரும் பிரிக்ஸ் அமைப்பின் 20வது உச்சி மாநாடு குறித்தும் பார்க்கலாம்.

பிரிக்ஸ்

கடந்த 2001-ம் ஆண்டு பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் (Jim O'Neill), பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை குறிக்கும் வகையில் BRIC (பிரிக்) என்ற சொல்லை பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட மேற்கத்திய அமைப்புகளுக்கு மாற்றாக இந்த நான்கு நாடுகளும் ஒன்றிணைந்து BRIC என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் முதல் மாநாடு 2009-ம் ரஷ்யாவின் யெக்டெரின்பர்க் (Yekaterinburg) என்ற நகரில் நடைபெற்றது. பின்னர், 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்ததைத் தொடர்ந்து, BRIC என்பது BRICS (பிரிக்ஸ்) ஆக மாறியது.

கடந்த 20 ஆண்டுகளில், பொருளாதார ஒத்துழைப்பை மட்டுமின்றி, வர்த்தகம், முதலீடு, நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த அமைப்பு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய நிதி மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு மாற்றாக, வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 2015-ம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளால் புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank) எனப்படும் புதிய வளர்ச்சி வங்கி உருவாக்கப்பட்டது. உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பிரிக்ஸ்

இதற்கிடையே, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இணைந்ததன் மூலம், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. தற்போது, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக இருக்கிறது. அதேசமயம், பிரிக்ஸ் ஒரு முழுமையான ஒற்றுமையைக் கொண்ட கூட்டமைப்பு என்று கூறிவிட முடியாது. இதன், உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார போட்டி, அரசியல் கருத்து வேறுபாடுகள், வெளியுறவுக் கொள்கையில் மாறுபட்ட அணுகுமுறைகள் என பல்வேறு சவால்கள் உள்ளன.

குறிப்பாக, இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்னை, ஈரான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மோசமான உறவு போன்றவை இந்த அமைப்பின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த சூழலில்தான் டெல்லியில் நடைபெற உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒருபுறம் ரஷ்யா-உக்ரைன் போர்.. மறுபுறம் ஈரானைச் சுற்றியுள்ள மோதல்கள்.. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நிலவும் வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என சர்வதேச சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில், பிரிக்ஸ் தலைவர்கள் ஒரே மேடையில் கூடவிருக்கின்றனர்.